இணையத்தில் அடிக்கடி ராஸ்பெர்ரி பை பற்றி பேசப்படுவதை அவதானித்திருப்பீர்கள்.

ராஸ்பெர்ரி கணினி

ராஸ்பெர்ரி பை என்றால் என்ன?


இதனை சுருக்கமாக கைக்குள் அடங்கும் ஒரு கணினி என்று கூட குறிப்பிடலாம்.


ஒரு கடன் அட்டையின் அளவை கொண்ட இதில் ஒரு கணினினியின் அத்தனை அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனுடன் கீபோர்ட், மவுஸ், மானிட்டர் போன்றவற்றை இணைத்து பயன்படுத்த முடியும்.

ராஸ்பெர்ரி பை கணினியில் பயன்படுத்தப்படும் இயங்குதளம் என்ன?


லினக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ராஸ்பியன் இயங்குதளம் இதன் உத்தியோகபூர்வ இயங்குதளமாகும். இருந்தாலும் இதற்கென வடிவமைக்கப்பட்ட மூன்றாம் நபர் இயங்குதளங்களையும் இதில் பயன்படுத்த முடியும்.

உபுண்டு மேட், விண்டோஸ் 10 IoT கோர், ஸ்னாபி உபுண்டு கோர், ரிஸ்க் ஓ.எஸ் போன்றவைகள் அவற்றுள் சிலவாகும்.


ராஸ்பெர்ரி பைஅறிமுகப்படுத்தப்பட்டது எப்போது?

2006 ஆண்டிலேயே இதன் மாதிரிப் பதிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும் இது 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 திகதியே உலகுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் முதல் பதிப்பு ராஸ்பெர்ரி பை 1 என்பதாகும். இதில் A, A+, B, B+, CM (Compute Module) என வெவ்வேறு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் ராஸ்பெர்ரி பை 2 மற்றும் ராஸ்பெர்ரி பை ஸீரோ  போன்ற பதிப்புகள் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டன, இறுதியாக  ராஸ்பெர்ரி பை 3 எனும் பதிப்பு இதன் மூன்றாம் ஆண்டு நிறைவில் அதாவது நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. (29-2-2016).

இது அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் இன்று வரை 8 மில்லியன் அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ராஸ்பெர்ரி பை விபரக்குறிப்புகள்:

இதன்  ராஸ்பெர்ரி பை 1 பதிப்பு 700 MHz வேகத்தில் இயங்கக்கூடிய ப்ராசசரை கொண்டிருந்த அதேவேளை 256 MB மற்றும் 512 MB ஆகிய இரு வேறு RAM நினைவகங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஸ்பெர்ரி பை 2 பதிப்பு  900 MHz இயங்கக்கூடிய குவாட்கோர் ARM Cortex-A7 ப்ராசசர் மற்றும் 1 ஜிபி RAM போன்றவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட ராஸ்பெர்ரி பை 3 பதிப்பு 1200 MHz வேகத்தில் இயங்கக்கூடிய குவாட்கோர் ARM Cortex-A53 ப்ராசசர் மற்றும் 1 ஜிபி RAM போன்றவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பதிப்பானது ராஸ்பெர்ரி பை 2 ஐ விட 50 சதவீதம் வேகமாக இயங்கக்கூடியதாகும்.  மேலும் இதில் வை-பை, ப்ளூடூத் போன்றவற்றை  பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

(முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ராஸ்பெர்ரி பை சாதனங்களில் வை-பை, ப்ளூடூத் வசதிகளை பயன்படுத்த அவற்றுக்கு பொருத்தமான வன்பொருள்களை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.)

இதன் விலை எப்படி?

இவைகள் மலிவு விலையிலேயே அறிமுகப்படுத்தப்படுகிறன இதன் ஆகக் குறைந்த விலை 5 அமெரிக்க டொலர் தொடக்கம் ஆரம்பமாகிறது. இதன் ஆகக்கூடிய விலை 35 அமெரிக்க டொலர்களாகும். (இதனை இந்திய ரூபாய்களில் குறிப்பிடுவது எனின் 340 தொடக்கம் 2400 இந்திய ரூபாய்கள் மாத்திரமே ஆகும்)

Love to hear what you think!

1 comments:

 
Top