தற்போது சமூக வலைத் தளங்களிலும், இணையத்தளங்களிலும் ஈர்ப்பு விசை அலைகள், அதாவது Gravitational Waves, பற்றிப் பேசப்படுகின்றது. "இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு" அல்லது "Scientific Sensation" என்று எல்லாம் தலைப்புகளை அவதானித்திருப்பீர்கள்

ஈர்ப்பு விசை அலைகள் என்றால் என்ன? 

உங்கள் எல்லோருக்குமே தெரியும், விண்வெளியில் நமது சூரியனைப் போல் என்ன, நமது சூரியனை விட எத்தனையோ மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களின் வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக, அதாவது black holes ஆக மாறிவிடும். அப்படி இரு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதி, பின்பு இரண்டும் ஒன்றாகச் சேரும் பொழுது spacetime என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெளிநேரத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் அதிர்வுகளைத் தான் ஐன்ஸ்டைன் ஈர்ப்பு விசை அலைகள் என்று கூறினார். ஐன்ஸ்டைனின் அந்தக் கணிப்பு சரியானது என்பதை தற்போது விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.


இதில் உள்ள ஆச்சரியம் என்ன தெரியுமா? 

இந்த ஈர்ப்பு விசை அலைகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனினால் அவருடைய பொதுச் சார்புக் கோட்பாடு (Theory of Relativity) மூலம் 100 வருடங்களுக்கு முன்னரே கணிக்கப்பட்டது. 11.02.2016 வரை இந்த ஈர்ப்பு விசை அலைகளை நேரடியாக அவதானிக்கப்படவில்லை. ஆனால் தற்போது அது அவதானிக்கப்பட்டுள்ளது.

அப்படி இந்தக் கண்டுபிடிப்பு ஏன் இவ்வாறு விசேஷமாகப் பேசப்படுகின்றது?


1609ம் ஆண்டில் கலிலியோ கலிலீ கண்டுபிடித்த தொலைநோக்கி அதாவது Telescope தான், தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியையே தலை கீழாகப் புரட்டிப் போட்டது. அதே போல் தான் இந்த ஈர்ப்பு விசை அலைகளின் கண்டுபிடிப்பும் நமது எதிர்கால விண்வெளி ஆராய்ச்சியை முற்றிலும் மாற்றி, புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தர அடிப்படையாக இருக்கப் போகின்றது என்று உறுதியாக நம்புகின்றார்கள். இன்று வரை ஒரு வித பதில்களுமே கிடைக்காத கேள்விகளுக்கு, 

உதாரணத்திற்குக் கருந்துளைகளின் கருவில் என்ன நடைபெறுகின்றது, அல்லது அது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு, எதிர்காலத்தில் பதில்களைக் காண இந்தப் புது ஈர்ப்பு விசை அலை ஆராய்ச்சித் துறை உதவப் போகின்றது.

ஆக மொத்தத்தில் இயற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதுக் கதவு திறந்து விட்டது என்பது மட்டும் அல்லாமல், இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு கிடைக்கப்போகின்றது என்பதில் ஒரு வித சந்தேகமும் இல்லை!

நன்றி: SciNirosh

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top